Friday, January 29, 2016


இருபது வருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி .நா.சு.வைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ''எனக்கு அவர்ட்ட புடிச்சதே அவருக்கு லௌகீகம் மேலே இருந்த உதாசீனம்தான். அவருக்கு இந்த உலகத்தில இருக்கிற எதைப்பத்தியும் கவலை கெடையாது. அன்னிக்கு டிபன் சாப்பிடணும், அவ்ளவுதான். குடும்பம் எங்கியோ இருக்கும். இவரு எங்கியோ இருப்பார். நாகர்கோயிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டோம், வந்தார். ஒருமாசம் தங்கலாமேன்னு சொன்னோம், தங்கிட்டார். மனைவி குழந்தை ஒண்ணைப்பத்தியும் ஒரு கவலை கெடையாது... ''

''குழந்தைகள்?'' என்று நான் கேட்டேன். ''ஒரு பொண்ணுதான் அவருக்கு. அது பாட்டுக்கு வளந்துது, படிச்சுது. ரொம்ப அழகா இருப்பாள். இவராப்பாத்து அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டார்னு அவரோட எல்லா நண்பர்களுக்கும் தெரியும். கவலையே படாம இருக்கக்கூடியவர் அவர். ஆனா அவரால நெனைச்சுகூட பாக்கமுடியாத மாப்பிள்ளை அமைஞ்சுது. லைஃப்லாங் பைசா பைசாவா சேத்தவங்களுக்குக்கூட அப்டி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது. செண்டிரல் கெவர்மெண்டிலே பெரிய வேலையிலே இருந்த ஒருத்தர் வந்து அந்தப்பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார். .நா.சு.வோட வாசகர் அவர். அந்தப்பொண்ணோட அழகும் அவருக்கு புடிச்சிருக்கணும்....''

''ஆச்சரியம்தான்'' என்றேன். ''.நா.சு.வுக்கு மட்டும்தான் ஆச்சரியமே இல்லை. கையில இருக்கிற மொத்த பைசாவையும் ஆட்டோவிலே அலைஞ்சு டிபன் சாப்பிட்டு காலி பண்ணிட்டு மறுநாளைக்குன்னு ஒரு பைசா இல்லாம உக்காந்திருப்பார். எப்பவுமே அவருக்கு பைசா தேடி வந்திருக்கே. அவர் ஒண்ணும் பட்டினி கெடக்கலியே.. .பெரிசா விக்கக்கூடிய ஒரு புக் கூட அவர் எழுதல்லை. புகழும் கெடையாது. எழுத்தை நம்பி வாழ்ந்தாரே...'' சுந்தர ராமசாமி சொன்னார் ''அதிலேருந்து எனக்கு ஒரு நம்பிக்கை.......... இந்த லௌகீகம்கிறது பொண்ணுகளை மாதிரி. பின்னாடி சுத்துறவனை கண்டுக்காம போக்கு காட்டும்அதுங்களை கண்டுக்காம போறவன் பின்னாடி நகத்தைக் கடிச்சுண்டு வரும்.''

.நா.சு.வின் மகளை மணந்த அந்த நல்ல மனிதரைப்பற்றி சுந்தர ராமசாமி சொன்னார். ''நம்மூர்க்காரர்தான். பார்வதிபுரம் அக்ரஹாரத்திலே பிறந்து வளந்தவர். பெரிய பதவிகளிலே இருந்தார். செம கில்லாடியான ஆள்னு கேள்விப்பட்டிருக்கேன். உலகம் முழுக்க சுத்தியிருக்கார். எவரெஸ்டுலேருந்து ஐஸ் கொண்டாந்து ஐஸ்கிரீம் சாப்பிடணும்னு ஒரு இண்டஸ்டிரியலிஸ்டுக்கு தோணிடுத்துன்னா அதை நிறைவேத்தறதுக்குன்னு டெல்லியிலே கொஞ்சம்பேர் இருப்பாங்கள்ல, இவர் அதிலே ஒருத்தர்....'' நான் ''அப்படியா?'' என்றேன். ''பிரமாதமான நாடக நடிகர்னு சொல்றாங்க. டெல்லியிலெ நெறைய நாடகம்லாம் போட்டிருக்கார்... .பா., சுஜாதா டிராமால்லாம் இவருதான் போடுவார்...''

மணி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதாவது தோற்றமளித்திருக்கிறார். அவரது திறமையை வெளிப்படுத்தும் படம் என்பது பாரதி மட்டுமே. அதில் வெள்ளையர் தன் கப்பல் வணிகத்தை அழித்துவிட்டதாக புலம்பும் இடத்தில் யார் இவர் என்று கேட்கச்செய்ய அவரால் முடிந்தது. மற்ற படங்களில் பெரும்பாலும் முதலமைச்சராகவே வந்து சென்றிருக்கிறார். ”பாட்டா இப்போ சும்மா காரில ஏறினாலும் செவப்பு வெளக்கு வேணும்கியாரேஎன்று அவரது நண்பர் சுரேஷ் கிண்டல் செய்யும் அளவுக்கு.

சுந்தர ராமசாமி இறந்து பல வருடங்கள் ஆன பிறகுதான் ஒருமுறை 'பாரதி' மணியிடம் பேசினேன். அதன்பின் என் எழுத்துக்கள் பற்றி அவ்வப்போது தொலைபேசியில் உரையாடிக்கொள்வோம். அதற்குள் நான் பார்வதிபுரத்துக்கே குடிவந்து தினமும் அக்ரஹாரம் வழியாக ஆஃபீஸ் போய்வர ஆரம்பித்திருந்தேன். அவர் ஞான. ராஜசேகரனின் 'பாரதி' படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்து பாரதி மணி என்ற பெயரைப் பெற்றுவிட்டிருந்தார். இப்போது நாஞ்சில் நாடன் அவரைப்பற்றி நிறைய பேசுவார். ''ஏகப்பட்ட பெரிய மனுஷங்களை தனிப்பட்ட முறையிலே தெரிஞ்சு வச்சிருக்கார்'' என்றார் நாஞ்சில் நாடன். அப்போது சுப்புடு இறந்துபோயிருந்தார். சுப்புடுவுடனான தன் உரையாடல்களைப்பற்றி மணி நாஞ்சில் நாடனிடம் சொல்லியிருந்தார். ''அதைப்பத்தியெல்லாம் அவர் எழுதலாம்'' என்றார் நாஞ்சில்.

''மனுஷங்களைப்பத்தி ரொம்பத் தெரிஞ்சு வச்சிருந்தா ஒண்ணைப்பத்தியும் எழுத முடியாதே'' என்றேன் கவலையுடன். நாஞ்சில் சிரித்துக்கொண்டு ''உண்மைதான்... அவருக்கு தெரிஞ்சதில பத்து பர்செண்ட் அவர் வாயிலேருந்து வெளியே வந்தாக்கூட அவரு தியாகி ஆயிடுவார்... டெல்லியிலே அவருக்கு மணிமண்டம் கட்டவேண்டியதுதான்'' என்றார். ''அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் எழுதலாம். அதுகூட நல்லாத்தான் இருக்கும்''. பாரதி மணி சுப்புடு மறைவை ஒட்டி அவரைப்பற்றிய தன் நினைவுகளை தீராநதியில் எழுதினார். அதைத்தொடர்ந்து உயிர்மை இதழில் அவரது புகழ்பெற்ற கட்டுரை வரிசை நினைவில் அசையும் திரைகள் வெளிவந்தது. முதல் கட்டுரைக்கே நான் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தேன்.

ஓர் எழுத்தாளனாக எனக்கு மைக்ரோ நெரேஷன் எனப்படும் நுண்ணிய தகவல்களில்தான் ஆர்வம். வரலாற்றையும் மனிதர்களையும் அவை காட்டுவதுபோல பிற கோட்பாட்டு ஆய்வுகளும் ஒட்டுமொத்த சித்தரிப்புகளும் காட்டுவதில்லை. மணி சொல்லும் விமானநிலையத்தில் தாமதப்படுத்தி அவமதிக்கப்படும் ராஜீவ் காந்தியின் சித்திரம் ஓர் உதாரணம். அதை புன்னகையுடன் ராஜீவ் எடுத்துக்கொண்டது அதிகாரத்தின் மறுபக்கமும் அவருக்குத்தெரியும் என்பதைக் காட்டுகிறது.

அத்தகைய நுண்தகவல்களினால் ஆன ஒரு குட்டிச் சுயசரிதை பாரதி மணியின் இந்த நூல். சின்னச்சின்ன தகவல்களை முக்கியப்படுத்திச் சொல்லவேண்டுமென்பது நல்ல எழுத்தாளர்களுக்கு உரிய கோணம். பாரதி மணியிடம் அந்தக் கோணம் சிறப்பாகவே செயல்படுகிறதென்பதற்கு இந்நூல் ஒரு ஆதாரம். வரலாற்றின் உள்மடிப்புகளைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் போன்ற தனிநபர் வரலாறுகள் மிகப்பெரிய சான்றாதாரங்கள். ஆன் சாங் சூகி போன்ற பெரிய வரலாற்றுக் கதாபாத்திரங்கள் சாதாரணர்களாக வந்துபோகிறார்கள் இந்நூலில். அவர்களின் சாதாரண முகங்களை வரலாற்று முகங்களுடன் ஒப்பிடுவதில்தான் நான் சொல்லும் வரலாற்றுப்புரிதலுக்கான வாய்ப்பு உருவாகிறது.

சரளமான நடையில் தனது இயல்பான நகைச்சுவையுடன் இதை பாரதி மணி எழுதியிருக்கிறார். காட்சிகளையும் இடங்களையும் விவரிப்பதில் அவரது நெடுநாளைய இலக்கிய வாசிப்பின் அனுபவம் தெரிகிறது. எங்கும் ஆரம்ப எழுத்தாளருக்குரிய முதிர்ச்சியின்மை தெரிவதேயில்லை. இந்த இளம் எழுத்தாளரை நான் வாழ்த்தி வரவேற்கிறேன். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.


                             ****                                             *****                                 ****                                                      

0 comments:

Post a Comment