Sunday, October 8, 2017

"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" -பாரதி மணி. ”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”. ”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம். ”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமளும் இருக்கமே!!!!" பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்த்து கொண்டுவரும் சம்பவங்கள்,... நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி". இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே சமர்ப்பித்திருக்கிறார். “ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import" சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்). நாகர்கோவில் -> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள். திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தகம்முழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.திருவாடுதுறையாரின் தோடியும் , வெள்ளி டம்ளரும்... (கட்டுரை : "நாதஸ்வரம் ‍‍‍, என்னை மயக்கும் மகுடி".) ("சங்கீத கோட்டி"யான தனக்கு மிகவும் பிடித்த கட்டுரை என்று நெகிழ்கிறார் "பாட்டையா" வார்த்தைக்கு "காப்பிரைட்" கேட்கும் சுகா...) ”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?” “தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா... “சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை.... படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள். மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது. மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் ரசவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது... ”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.., ”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும். தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்.... ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்பட்ட குழப்பம், இன்னும் பல பல விஷயங்கள்..... ”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம். ["கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார். ] (சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும். சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை தனதாக்கிகொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,.... “தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார். புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்..............(படித்ததில் ஆக பிடித்தது சுகாவுடையது...) பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!" வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்???? Bharati Mani ************************************* புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதிமணி வம்ஸி புக்ஸ் ISBN # 978-93-84598-06-8 விலை : ரூ. 550. ************************************* www.vazhippokkann.blogspot.com
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி Unexpected compliments from unknown readers do add some momentary pep in an early morning! அன்புள்ள தன்ராஜ், குடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டாலும், இதுபோன்ற வாசகர் கடிதங்கள் எனக்கு சற்று போதையை தருகின்றன என்பதை மறுக்கமுடியாது!... ஏனோ இக்கடிதத்தை இருமுறை படித்தேன். உங்களுக்கு என் நன்றி! பாரதி மணி =============================================== அன்பின் பாரதி மணி சார், இப்போழுதே படித்து முடித்து, ”புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” புத்தகத்தை என் முன்னால் உள்ள ரயில் மேஜையில் மூடி வைத்தேன். அதன் அட்டைப்படத்தில் நீங்கள் மோவாயை தாங்கி கொண்டு என்னை நோக்கி மென் புன்னகை சிந்திக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கு உடனடியாக வாசக கடிதம் அனுப்ப வேண்டும் என்று தோன்றிவிட்டது. இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் வாசக கடிதம். பல கட்டுரைகளை உங்கள் வலைப்பூவிலும், உயிர்மையிலும் பல முறை படித்திருந்தாலும் முழு தொகுப்பாக படித்து முடித்தது வேறு ஒரு வித நிறைவான அனுபவத்தை கொடுத்தது. உங்கள் எழுத்துக்கள் எனக்கு எப்போழுதும் ஒரு இரண்டு பெக் போட்டுவிட்டு வாஞ்சையுடன் பேசும் ஒரு நெருங்கிய நண்பன் தன் அனுபவங்களை சொல்வது போல இருக்கும். இந்த முறை சில பாராட்டுரைகளை படிக்கும் போது மரியாதைக்குரிய முது குடிமகனாகவும் மனதில் பதிந்துவிட்டீர்கள். இருப்பினும் எனக்கு அந்த வாஞ்சையான நண்பனைத்தான் மிகவும் பிடித்திருக்கிறதென்பதைச் சொன்னால் கோபப்பட மாட்டீர்களென நினைக்கிறேன். இந்தக் கடிதமே நீங்கள் எப்பொழுதும் சொல்லும் "one book wonder" ஆக நீங்கள் நிற்காமல் மேலும் மேலும் எழுத வேண்டும் என வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்ளத்தான். சமீபத்தில் உங்கள் திருமணம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து விட்டு என் மனைவிக்கும் வாசித்து காட்டினேன். சார் உங்களை போல் சிறிதளவாவது நான் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் பெங்களூர் வாசியாகிவிட்டீர்கள் என கேள்வி.பெங்களூர் பிடித்திருக்கிறதா சார்? நீங்கள் பூரண உடல் நலத்துடனும் , உற்சாகத்துடனும் நிறைய எழுத வேண்டும் என இறைவனிடம் ப்ராத்திக்கிறேன். Thank you for the joy you brought to my life through your writings sir. தொடர்ந்து எழுதுங்கள், படிக்க என்னைப் போன்ற பல்லாயிரம் வாசகர்கள் உலகம் முழுக்க காத்திருக்கிறோம். இப்படிக்கு, உங்கள் விசிறி, தன்ராஜ். Sent from a phone. Please excuse brevity and typos.

Friday, October 6, 2017


புள்ளிகள் கோடுகள் கோலங்கள்—பாரதி மணி  இப்புத்தகம் ஒரு தொகுப்புகளின் தொகுப்புபாரதிமணியின் கட்டுரைகள், பதிவுகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், உரைகள், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகிய அனைத்தையும் வகைவாரியாகத் தொகுத்து அவற்றை ஒரே தொகுப்பு நூலாக வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

பார்வதிபுரம் மணி அல்லது தில்லி மணி அல்லது S.K.S.மணியாக இருந்தவர் பாரதி (2000) திரைப்படத்தில் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயராக நடித்துப் பரவலாக அடையாளம் காணப்பட்டதால் அத்திரைப்படப்பெயரை முன்பெயராக இணைத்து 'பாரதி'மணி ஆகியிருக்கிறார். 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி போன்றபெயர்கள் காலப்போக்கில் தங்கள் ஒற்றைமேற்கோள்குறிகளை இழந்து அவர்களின் இயற்பெயர்களாகவே ஆகிவிட்டதைப்போல 'பாரதி'மணியும் சிலவருடங்களில் பாரதிமணி ஆகிவிட்டார். ஒருவருக்கு அறுபது வயதுக்குமேல் புதிதாக ஒருபட்டப்பெயர் கிடைப்பதும் அது இயற்பெயரோடு ஒன்றிவிடுவதும் ஓர் ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் 1956ல் தக்ஷிணபாரத நாடகசபாவைத் தொடங்கி அதில் நடிக்கவும் தொடங்கி சுமார் இரண்டாயிரம் நாடகங்கள் போட்டு நடித்தவருக்கு, லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் குரல்பயிற்சியில் டிப்ளோமா பெற்றவருக்கு ஒரு சினிமாவின் சிறுவேடம்தான் இன்றைய முகவரி ஆகியிருக்கிறது. சினிமாவின் வீச்சு அப்படி என்று ஆப்டிமிஸ்டிக்காக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்தன்னையொரு incorrigible optimist ஆக அறிவித்துக்கொள்ளும், 77 வயது நிறைந்த, டெல்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த, க.நா.சு.வின் மாப்பிள்ளையான, இந்த மனிதரைப்போல. நாடக நடிப்பு பெயரைக் கொடுக்காவிட்டால் என்ன? வாழ்க்கைத் துணையையே இவருக்கு அமைத்துத்தந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகத்தில் 1970ல் இவருடன் சேர்ந்துநடித்த க.நா.சு.வின் மகள் ஜமுனாவைத்தான் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்.



அனுபவக் கட்டுரைகளை வரலாறாகச் சுவைபட எழுதத்தேவையான நினைவாற்றலையும், ரசனையையும், பாசாங்கின்மையையும் - தன் பதினெட்டாவது வயதில் (1955) நாகர்கோவிலிலிருந்து வேலைக்காக தில்லிசென்ற - இவரது எழுத்துக்களில் உடனடியாக எவரும் கண்டுகொண்டுவிடமுடியும். அந்தகாலத்தில் டில்லியிலிருந்து சென்னை வரும் ஜனதா எக்ஸ்பிரஸ் பயணத்தை எழுதவருபவர், 'எப்போது சென்னை சேருமென்பது அப்போதைய ரயில்வேமந்திரி ஜக்ஜீவன்ராமுக்கே தெரியாது. வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலுன் உடனே நிற்கவேண்டுமென்ற தனியாத ஆசை அதற்குண்டு' என்றெழுதியிருப்பது ஒரு சோறு. 'லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜிமந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA-50L என்று எழுதிவைத்திருந்ததற்கு, அத்வானி என்ற தன் மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத்தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். CBIயும் ஏற்றுக்கொள்கிறது' என்றெழுதியிருப்பது இன்னொரு சோறு. பாசாங்கின்மைக்குத் தனியாக உதாரணம் ஏதும் தேவையில்லை; தொலைபேசியை பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழித்த தருணத்திலிருந்து தன் மது, புகைப்பழக்கங்களை விரிவாகப் பேசுவதிலிருந்து, எவ்வளவு புகழ்பெற்ற ஆளுமைகளைப்பற்றியும்  நினைத்ததைச் சொல்லிவிடுவதுவரை அனைத்தையும் வாசகர்முன் வெளிப்படையாக வைத்துவிடுகிறார்.

ராமச்சந்திரகுஹாவின் 'காந்திக்குப்பின் இந்தியா'வில் ஐனூற்றுக்குமேற்பட்ட சின்னதும் பெரிதுமான சமஸ்தானங்களை எப்படியெல்லாம் பாடுபட்டு சர்தார் படேல் தலைமையில் ஒன்றிணைந்த இந்தியாவாக்க முயற்சிகள் நடந்தன என்பது விரிவாக எழுதப்பட்டிருக்கும். அதை வாசிக்கும் ஒருவருக்கு, இந்தியா என்ற தேசத்தைக்கட்டியமைக்கும் பார்வையிலிருந்து, திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவிற்சேராமலிருக்க சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர் (சமஸ்தான திவான்) தன் நாவன்மையாலும் செல்வாக்காலும் செய்த தடைகள் ஒரு வில்லன் தோற்றத்தை உருவாக்கும். அந்த வில்லனை இன்னொரு கோணத்திலிருந்து பாரதிமணியின் 'நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்' கட்டுரையில் காணமுடிகிறது. சர்.சி.பி.யின் சிறப்பும், தரப்பும் அக்கட்டுரையின் ஒருபகுதியாக சுருக்கமாக வருகிறது. வரலாற்றில் குணம் நாடிக் குற்றமும் நாடும் பொறுப்பு அவ்வகையில் வாசகருக்கே விடப்படுகிறது.

பாரதிமணியினும் ஏழெட்டுவயது மூத்த இந்திரா பார்த்தசாரதி, கிட்டத்தட்ட சமவயதுள்ள வெங்கட் சாமிநாதன், அவரைவிடப் பத்துவயது குறைந்த நாஞ்சில் நாடன், நாஞ்சிலைவிடப் பதினைந்துவயது குறைந்த ஜெயமோகன், ஜெயமோகனைக்காட்டிலும் பத்துவயது குறைந்த சுகா என்று பாரதிமணியை நெருக்கமாக அறிந்த பலதலைமுறைகளும் சொல்லிவைத்தாற்போல் ஒரேகுரலில்,  'நீங்க எழுதியதைவிட எழுதாததுதான் அதிகம்' என்றும் 'நீங்க எல்லாத்தையும் எழுதணும்' என்றும் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதிமணிக்குத் தத்தம் எழுத்துக்களில் வேண்டுகோள் விடுக்குமளவுக்கு இவரிடம் எழுத அப்படி என்ன இருக்கக்கூடுமென்ற கேள்விக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது 1956ல் நடந்த ஒரு...... விருந்துமுடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், 'why this prolonged cold war between Sivaji Ganesan and MGR?' என்று அவர்கேட்ட முதல்கேள்வியும், அதைத்தொடர்ந்துவந்த 'ஜெமினிகணேசன்-சாவித்திரி திருமணத்திற்கு முதல்மனைவி சம்மதம் இருந்ததா?', 'சரோஜாதேவிக்கும் இன்ன நடிகருக்கும் என்ன தகராறு?', 'அந்த ஹிந்தி நடிகை இப்போதெல்லாம் அதிகமாகக் குடிக்கிறாராமே?' போன்ற கிசுகிசு கேள்விகளும் நம் குடியரசுத்தலைவர் வாயிலிருந்து வந்ததை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை.... அவரைப்பார்க்கும்போது என் மனதுக்குள் இருந்த பிம்பம் இந்தியாவின் சமகால வேதாந்தியின் impeccable English ஆளுமையும், என் தந்தையிடம் பார்த்த ஐந்து வால்யூம் Indian Philosophy - By Dr.S.Radhakrishnan புத்தகங்களும்தான். தந்தையிடம் இதைப்பற்றிச்சொன்னபோது, 'அவாளும் மனுஷாதானேடா. நமக்கிருக்கிற ஆசாபாசங்கள் எல்லாம் அவாளுக்கும் உண்டு' என்பதுதான் அவர் பதில்" என்ற பத்தியை ஒரு கட்டுரையில் படித்ததும் கொஞ்சமாகவும், 'எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்..... எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான் ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர்' என்று கூர்மையாகத் தொடங்கி மேன்மேலும் விளக்கிச்சென்று கிட்டத்தட்ட சர்தார்ஜிகளின் இனவரைவியல் கட்டுரையாகவே 'சிங் இஸ் கிங்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த இன்னொரு கட்டுரையைப் படித்ததும் முழுமையாகவும் பதில் கிடைத்தது. இதுதான் என் முதலும் கடைசியுமான புத்தகம் என்று சொல்பவரிடம் அவர்கள் எல்லாத்தையும் எழுதச்சொல்லி வற்புறுத்துவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

கேள்வி ஞானத்திலேயே நூறு ராகங்கள்வரை கண்டுபிடிக்குமளவுக்கு இவர்சிறுவயதிலேயே பெற்றிருந்த ரசிப்புத்திறனும், பின்னாட்களில் தில்லி கர்நாடக சங்கீத சபாவுக்குச் செயலராக இருந்தபோது கிடைத்த தமிழ்நாட்டின்அநேக முதல்தரக் கர்நாடகசங்கீதக் கலைஞர்களின் நெருக்கமான நட்பும் இவரை எழுதச்செய்திருக்கும் 'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' கட்டுரை சங்கீத ரசிகர்கள் தவறவிடக்கூடாதது. வருடாவருடம் கிருஷ்ணகான சபா ஏற்பாடுசெய்யும் நாதஸ்வர விழாவில் தவறாமல் கலந்துகொண்டு இன்னொரு ராஜரத்தினமோ, அருணாச்சலமோ தென்படுவார்களா என்று தேடுவது ஏதோ பொழுதுபோகாமல் சங்கீதம் கேட்பவரல்ல இவர் என்பதைச்சொல்கிறது. சுப்புடுவின் நிர்தாட்சண்யமான இசைவிமர்சனங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் தான் பார்த்தேயிராத ஒரு நாடகத்திற்கு தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாகக் காட்டமான விமர்சனம் எழுதி அது ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையிலும் வெளியானதை 'சுப்புடு சில நினைவுகள்' கட்டுரையில் அறியமுடிகிறது. நாடகம் சுப்புடுவின் எதிர்முகாமினரால் - இதில்தான் மணி இருக்கிறார் - முதலில் திட்டமிடப்பட்டுப் பிறகு கடைசிநேரத்தில் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது தெரியாததால் நடந்திராத நாடகத்தை அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்த சுப்புடு கையுங்களவுமாக மாட்டிக்கொண்டுவிட்டார். இவருடனான நட்பாலோ என்னவோ 'Mani's acting was the only redeeming factor' என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தாராம் விமர்சனத்தை!

மணியின் கதையா? மணியான கட்டுரைகளா? என்று பிரித்தறியமுடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் ஒரு வாசகனுக்கு அளிக்கும் மதிப்புகூட்டல் மூன்று தளங்களிலானவை;

முதலாவது தன்னிலிருந்து விலக்கிவைத்துப் பார்த்துப் போற்றவோ, தூற்றவோ மட்டுமே என்று இயல்பாகவே முடிவுகட்டப்பட்டுவிட்ட வரலாற்றுப்பிரபலங்களின், வார்க்கப்பட்ட பிம்பங்களுக்கு இன்னொரு பரிமாணத்தைக்கூட்டி முப்பரிமாணத்தில் நம்மிடையே இன்னுமொரு மனிதனாக உலவச்செய்வது. இந்தியத் தத்துவமும், இந்திய சினிமா நட்சத்திர கிசுகிசுவும் ஒரே மனிதரிடத்தில் mutually exclusive ஆக இருக்கமுடியும்; ஒன்றையொன்று பாதிக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இன்றைய தலைமுறைக்குக்காட்டுவது அவசியம். சாதனையாளர்களும் சில தனித்திறமைகள் கைவரப்பெற்ற சராசரிமனிதர்களே என்பதை உள்ளூற உணர்வதுதான் சராசரிகள் சாதிக்கத்துணிய முதற்படி என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவது, டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்று ஒரு தகவலுடன் மட்டுமே முக்காலேமூணுவீசத் தமிழர்களுக்கு வாழ்வில் டெல்லியின் பரிச்சயம் முடிந்துபோய்விடக்கூடிய நிலையில், அங்கே அரைநூற்றாண்டு வாழ்ந்த ஒரு தமிழரின் அனுபவங்களை விரிவாகவும் நுணுக்கமான தகவல்களுடனும் வாசிப்பது அந்நகரைக்குறித்து - அங்கு செல்லாதவருக்கும் - உண்மைக்கு மிகஅருகில் மனச்சித்திரங்களை உருவாக்குவது. மண்ணும் மனிதர்களும்தான் எந்தவகை எழுத்தின் சாராம்சமும் என்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் பாரதிமணிக்கு எதையும் மேம்போக்காகச் சொல்லும் பழக்கமே கிடையாது என்பதால் தில்லிக்காரர்கள் வணக்கம் செலுத்துவது, ஏப்பம்விடுவது முதல் மரணத்தை அதன் சடங்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுவரை நுண்தகவல்களுடன் - தமிழ்நாட்டின் பழக்கங்களுடன் ஒப்பிட்டும் - எழுதியிருப்பது பெருஞ்சிறப்பு. தமிழர்கள் இந்திப் பெயர்கள் உச்சரிப்பில் செய்யும் பிழைகளையும் இடம்கிடைக்கும் போதெல்லாம் லல்லு அல்ல லாலு, இர்பான் பதான் அல்ல பட்டான், சட்டீஸ்கர் அல்ல சத்தீஸ்கட், சுனில் மிட்டல் அல்ல மித்தல் என்று நூல்நெடுக பொறுப்பாக சொல்லிக்கொண்டே வருவதைப்போல் அதிகம்பேருக்குச் சொல்லத்தோன்றாது.

மூன்றாவது, ஒரு சாதாரண மனிதனின் சொற்கள் சந்தேகமின்றி அப்படியே ஏற்கப்படுவதை வாசகர் காண்பது. சொல்லப்படும் நிகழச்சிகள் கிசுகிசுக்களாக அல்லாமல் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்க்கப்படுவதன் ஆதாரப்புள்ளி இதில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து விடிந்து வெகு எளிதாகக் கடந்துபோய்விடக்கூடிய வாழ்நாட்களின் சாதாரணமான சம்பவங்கள் வழியாகத்தான் மெல்லமெல்ல, அறிந்தவர்களின் நட்பின் நம்பிக்கைக்கு ஒருவர் பாத்திரமாகமுடிகிறது. நீண்டநெடிய பொறுப்பான அவ்வேலையின் இறுதியில் கிடைக்கும் பரிசு, எழுதும் ஒரு சொல்லும் உதாசீனப்படுத்தப்படாமல் ஏற்கப்படுவதுதான்; தனிப்பட்ட முறையில்  அறிந்தவர்களால் மட்டுமல்லாமல் வாசிப்பவர்கள் அத்தனைபேராலும். தோழர் நல்லகண்ணுவை திருநெல்வேலி ஜங்ஷனில் சந்தித்தபோது உரையாடிவிட்டு ரயிலில் ஏறப்போனப்பொது தோழர் சாதாரண ஸ்லீப்பரிலும், தான் ஏ.சி.யிலும் பயணம் செய்வதை யோசித்துக்கொண்டே குற்றவுணர்ச்சியில் ஒரு ராத்திரி தூக்கமிழந்த மனிதரின் வார்த்தைகளை நம்புவதற்கு என்ன கஷ்டம்?

மணியுடன் நாதஸ்வர இசையைத் துணைக்கு வைத்துக்கொண்டு மதுவருந்துவதேகூட இலக்கிய அனுபவம்தான் என்று இலக்கியப்பிரபலங்களால் வழங்கப்படும் சான்றிதழ்களைத்தவிர நேரடியாக எழுத்திலிருந்தே வாசகரை நெகிழச்செய்யும் அனுபவங்களும் நூலில் உண்டு. உதாரணமாகக் குடியரசுதினக் கொண்டாட்டங்களின் நிறைவைக்குறிக்கும் வகையில் ஜனவரி 29ம் தேதி மாலை ஆறுமணிக்கு, வருடாவருடம் முப்படைகளின் பாண்டுவாத்தியக் குழுக்களும் இணையும் பிரம்மாண்டமான Beating Retreat நிகழ்ச்சியைப் பற்றி அறிமுகப்படுத்தி இவரெழுதியிருக்கும் விதத்தில் அதைப்பார்க்காமலேயே நெஞ்சு தேசப்பெருமிதத்தில் விம்மிப்புடைக்க ஆரம்பித்தது உண்மை. இலக்கிய அனுபவம் மெல்ல தேசப்பெருமித உணர்வாக மாறும் தருணமாக அது இருந்தது. பிறகு அந்நிகழ்ச்சியின் இந்த வருடக்காணொளியையும் - முதன்முறையாக - இணையத்தில் பார்த்து பிரமித்தேன்.

கொஞ்சமும் சந்தேகத்திற்கிடமின்றி வரலாற்று மதிப்பு மிகுந்ததொரு எழுத்து, தொகுப்பு.

(புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 560, விலை  ரூ.550)


   
- சிவானந்தம் நீலகண்டன்

Thursday, October 5, 2017



நானே சொல்கிறேன்…..இது ஒரு மொண்ணையான கட்டுரை. நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும், வெண்ணையைக்கூட நாலைந்து தடவை மேலும் கீழும் அழுத்தி வெட்டினாலும் வெட்டாத மொண்ணைக்கத்தி மற்றும் Peeler பீலரைப்பற்றியது. நான் எழுதிய மொக்கைக்கட்டுரைகளில் இதற்கு முதலிடம் கிடைக்கும்!


டி.எம்.எஸ்ஸோ யாரோ பாடிய பாட்டு ரேடியோவில் வரும்: நல்ல மனைவி அமைவதெல்லாம்.....இறைவன் கொடுத்த வரம்!’....அவன் தயவில்லாமலே நல்ல மனைவி கூட அமைந்துவிடலாம். ஆனால் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் ஒரு நல்ல கத்தி அல்லது பீலர் கிடைப்பது அதைவிட துர்லபம்.


பார்வதிபுரம் கிராமத்தில், என் செறுப்பக் காலத்தில் சமையலுக்கு கத்திபீலர் எல்லாம் கிடையாது. என் முப்பாட்டிகள், பாட்டிகள், அம்மா காலத்தில் காய்கறிகளை தோலுரித்து, செப்பனிட்டு அடுப்பிலேற்ற சமையலறையில் கோலோச்சி இருந்தது அருவாமணை -- அரிவாள்மணை -- என்ற சாதனம் தான். எந்தக்காயாக இருந்தாலும், பிளக்க, வெட்ட, தோலுரிக்க, நறுக்க, சுரண்ட, பொடிதாக அரிய, அருவாமணையை விட்டால் வேறு இல்லை. ஒரு பலாப்பழத்தைக்கூட ஒரே போடில் இரண்டாகப்பிளந்துவிடலாம். (பலாப்பிசின் ஒட்டிக்கொண்டால் ஒருநிமிடம் அடுப்பில் காண்பித்து துணியால் துடைத்தால் போயே போயிந்தி!) கொல்லைப்புறத்திலிருந்து வாழையிலை அறுக்கவும் என் அம்மாவுக்கு அரிவாள்மணையே துணை! அருவாமணையில் தெரிந்தவர்கள் அறக்கீரை அரிந்தால், கீரை மத்துக்கு வேலையே இருக்காது! என் வீட்டில் இருந்த அரிவாள்மணை என் அம்மா கொண்டு வந்ததா ... இல்லை புக்ககத்திலேயே இருந்ததா என்பது தெரியாது. எத்தனை வருடங்களாக அது உபயோகத்தில் இருக்கிறதென்பதும் தெரியாது. சற்றே ஆராய்ந்தால் கீழடிக் கலாசாரத்துக்கே போகலாம்! கொஞ்சம் அசந்தால் கைவிரல்களை பதம் பார்த்துவிடும். என் சிறுவயதிலேயே பாந்தமாக அருவாமணையில் நறுக்குவது எனக்கு கைவந்துவிட்டது. 

எதைச்செய்தாலும் ஓரளவு பாந்தமாக செய்யவேண்டுமென்று நினைப்பவன் நான். காலையில் வரும் ஆங்கில தினசரியில் சிலநாட்கள் விளம்பரத்தோடு ஒருபக்கம் மட்டும் நாக்கைத்துருத்திக்கொண்டு வெளியே தலையை நீட்டும். அதை அழகாக மடித்து உள்ளே தள்ளியபிறகு தான் பேப்பரை திறப்பேன்.


நான் தில்லி போகும்போது மணைஅரிவாள்மணை - என்னோடு துணை வரவில்லை. அங்கே எல்லாமே கத்தி தான்! அறுபதுகளில் தில்லியில் நான் போட்ட ஒரு நாடகத்தில் (காவ்யராமாயணம்கே.எஸ். ஸ்ரீநிவாசன் எழுதிய சந்திஎன்ற நாடகம்) ஒரு முழு சீனும் நான் அரிவாள்மணையில் காய்கறி நறுக்கிக்கொண்டே பேசுவதாக காட்சி தொடரும். அந்த நாடகத்துக்கு விமர்சனம் எழுதிய வெங்கட் சாமிநாதன் ஒரு வாலிபன் இத்தனை பாந்தமாக அரிவாள்மணையை கையாள்வது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்! (ஒரு டிஸ்கி:: அப்போது எங்களிருவருக்கும் பரிச்சயமில்லை!) இன்னொரு காரணமும் இருக்கலாம். நான் ஒரு பீச்சாங்கையன் Left Hander. ராகுல் த்ராவிட் விளாசும் கவர் ட்ரைவை விட கங்கூலியின் ஸ்ட்ரோக் இன்னும் அழகல்லவா?


தமிழ்நாட்டிலும் மேடைச்சமையல் வந்ததிலிருந்து அரிவாள்மணைக்கு வேலையில்லாமல் போனது துரதிஷ்டம்! பழந்தமிழ்வாதிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் ஆயுதமான அரிவாள்மணையை மறுபடியும் புழக்கத்துக்கு கொண்டுவரவேண்டுமென்று ஏன் இன்னும் போராட்டம் தொடங்கவில்லை? புலியை முறத்தால் விரட்டியடித்த தமிழச்சி வீட்டில் அப்போதே அரிவாள்மணையும் இருந்ததென்று சரித்திர ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. அரிவாள்மணையின் இடத்தை கத்தி பிடிக்க விடலாமா? தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அரிவாள்மணையையும் தேர்தல் சின்னமாக விரைவில் அறிவிக்கவேண்டும். ......தொப்பி என்ன தொப்பி?


மாம்பழக்காலங்களில், அப்பா இருபது மாம்பழங்களை நன்றாக கழுவித்துடைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு உட்காருவார்...... அவரைச்சுற்றி நாங்களும். மடியிலிருந்து அவர் மனைவியைவிட அதிகமாக நேசித்த அவரது  Pen Knife பேனாக்கத்தியை எடுத்து விரித்து முதலில் காம்புப்பக்கத்தை சீவுவார். (இன்றைய தலைமுறைக்கு தெரியாத பேனாக்கத்திக்கு ஏன் இந்த பெயர் வந்தது? Fountain Pens காலத்துக்கு முந்தியிருந்த Squills இறகுப்பேனாவை கூர் செய்வதற்கு இந்தக்கத்தி பயன்பட்டது) பிறகு மாம்பழத்தின் மேல் ஒரே சீராக மேலிருந்து கீழ் சுற்றிச்சுற்றி அவரது கத்தி வழுக்கிக்கொண்டே போகும். கத்தி விடுபடும்போது அவர் கையில் மஞ்சள் நிறத்தில் அம்மணமான மாம்பழமும் கீழே குடை ஸ்ப்ரிங் மாதிரி நாங்கள் கையில் தூக்கித்தூக்கி விளையாடும் தோலும் விழும். மாம்பழத்தை உடனே நறுக்கமாட்டார். இருபது மாம்பழங்களுக்கும் ஒரே மாதிரி துச்சாதனன் பாணியில் வஸ்த்ராபகரணம் செய்வார். மாம்பழங்களும் ஹே....க்ருஷ்ணா!என்று அலறாது. அவனும் வரமாட்டான்! அப்பாவின் பேனாக்கத்திக்கு பயந்தோ என்னவோ! அவரது பேனாக்கத்தி  கடையில் வாங்கியது அல்ல...ஸ்பெஷலாக சொல்லிச்செய்தது. வெற்றிலைபாக்கு போடும் நண்பர்கள் பச்சைப்பாக்கு சீவ கேட்டாலும் கொடுக்கமாட்டார்.  அவர் அடிக்கடி சொல்வது:: “Like wife, pen and knife are not to be shared! துண்டாக நறுக்கிமுடிந்ததும் கொட்டையெல்லாம் எங்களுக்கு. கதுப்புக்களை வெட்டி, ஒவ்வொரு கிண்ணமாக இது பாட்டிக்கு, இது மாமாவுக்கு, இது அடுத்தாத்து அத்தைப்பாட்டிக்குஎன்று போகும். தாம்பாளத்தில் மீதமிருக்கும் துண்டுகளும் கொட்டைகளும் எங்களுக்கு சரிவிகிதத்தில் பிரிக்கப்பட்டாலும் அவனுக்கு நெறய குடுத்தே!பராதியை தவிர்க்கமுடியாது!


எங்கள் பார்வதிபுரம் கிராமக்கோவிலில் வருடத்திற்கு 14 நாட்கள் (பங்குனி உத்திரம், புரட்டாசி சனிக்கிழமை, அட்சய திருதியை, கிருஷ்ணஜெயந்தி போன்ற நாட்களில்) ஆயிரம்பேருக்கு மேல் அன்னதானம் ஸத்யைநடக்கும். தக்கலை, புலியூர்க்குறிச்சி, கணியாகுளம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம், ஒழுகிணசேரி, வேம்பனூர், சுசீந்திரம், மஹாதானபுரம், பூதப்பாண்டி, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அதற்கு முன்தினம் இரவு நடக்கும் காய்கறி வெட்டுபூஜையுடன் தொடங்கும். அதற்கு கிராமத்து மக்களை கலந்துகொள்ள வீடுதோறும் வந்து அழைப்பார்கள். வீட்டுப்பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மிகக்கூர்மையான கத்தியோடு அதில் கலந்துகொள்வார்கள். அப்போது ஹெட் குக் கோம்பை மணியன்என்னை தனியாக அழைத்து, ‘கிச்சாமணி, இவாள்ளாம் யானைத்தண்டிக்கு பெரிசு பெரிசா நறுக்குவா.  மத்த கூட்டு கறிக்கு பரவாயில்லை. அவியலுக்கு நறுக்கறவாளெ கொஞ்சம் கவனிச்சுக்கோ. கசாம்புசான்னு பெரிசும் சின்னதுமா வெட்டி வெச்சுரப்போறான்!என்று எச்சரிப்பார். அவியலுக்கு சேரும் காய்கறிகள் சதுரமாக இல்லாமல் ஒன்றரை இஞ்ச் அளவில் சீராக இருந்தால் தான் அவியல் பார்க்க அழகாக இருக்கும். அதனால் தான்”  வெட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவியல் காய்கறி நறுக்க  அனுமதி உண்டு! அதற்கு நான் மேற்பார்வையாளன்!


அரிவாள்மணை பற்றி தெரியாத இந்த இளைய சமூகத்துக்கு பழைய படம் இருந்தால் போடலாமேயென்று கூகிளாண்டவரை அணுகினேன். அதில்அருகாமனைஎன்று வருகிறது! முட்டாளே! கத்தியும் பீலரும் அருகாமனைகளில் அந்தக்காலத்தில் அரிவாள்மணை தான் கோலோச்சியது. எனக்கு அடுத்த தலைமுறைகளில் அரிவாள்மணையுடன் தேங்காய்த்துருவியையும் இணைத்து Two-in-One அர்த்தநாரீசுவரராக ஒரு அவதாரம் இருந்தது. என் வீட்டில் மாதொருபாகனாக இல்லாமல் இரண்டும் தனித்தனியாகவே இயங்கின.


எழுபதுகளில் தான் முதன்முறையாக Anjali Brand பீலர் மார்க்கெட்டுக்கு வந்தது. அதில் சிலது மழுங்காது நீடித்து உழைக்கும். அது தான் நான் மேலே சொன்ன இறைவன் கொடுத்த வரம்’.  இன்னும் சிலது முதல்முறையே தோலோடு சதையையும் கவ்விக்கொண்டுவரும். சரி....பீலர் என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன? கவிஞர் மகுடேசுவரனிடம் கேட்டால் தோலுருச்சிஎன்பார். எதற்கு வம்பு? பீலர் என்றே இருந்துவிட்டுப்போகட்டுமே! ஆனால் டிவி தொகுப்பாளினிகள் தான் அதை Beeler, Feeler, Bheeler என்றெல்லாம் உச்சரிக்கும் அபாயம் உண்டு!


அடிப்படையில் நான் நாடகநடிகனோ எழுத்தாளனோ அல்ல…… ஒரு சமையல் கலைஞன். நளன், பீமன் பரம்பரையில் வந்தவன். நன்றாக சமைக்கவும் பிடிக்கும்....சம்பிரமமாக சாப்பிடவும் பிடிக்கும். எனக்கு மொண்ணைக் கத்திகளைப் பார்த்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டுவரும். எனக்கென்று தனியாக வைத்திருக்கும் கத்திகள் மிகக்கூர்மையாக இருக்கும். என் மாமியார் ராஜி (திருமதி க.நா.சு.) ஐயோ...இது மணி கத்தி.....வேண்டாம்... தொட்டாலே வெட்டிரும்!என்பார்!  கொத்தவரங்காயோ பீன்ஸோ....நான் பேசிக்கொண்டே சக்..சக்சக்கென்று வேகமாக நறுக்குவதைப்பார்த்து என் மகள் அப்பா! ஜாக்ரதை!என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.  எனக்கொரு சந்தேகம் எப்போதுமுண்டு. ஏன் என்னைத்தவிர மற்றவர்கள் வீட்டில் மொண்ணைக்கத்திகளாகவே வைத்திருக்கிறார்கள்? நாலு பீன்சை வைத்து மொண்ணைக்கத்தியால் ஏழுதடவை மேலும் கீழும் இழுத்து பீன்ஸை துவம்சம் செய்பவர்களை பளார்என்று அறையவேண்டுமென்ற தணியாத ஆவல் எழும்! I am a born Chef!


பல ஆண்டுகளுக்குமுன்னால் மும்பை பம்பாயாக இருந்தபோது அங்கு என் நண்பன்வீட்டில் இரண்டுநாள் தங்கியிருந்தேன். எங்கே போனாலும் அன்றைய காய்கறி நறுக்கும் வேலையை கேட்டு வாங்கிவிடுவேன். நான் போகுமிடமெல்லாம் என்னோடு ஒரு கூர்மையான கத்தியும் பீலரும் உடனிருக்கும். நறுக்க பீன்ஸ் கொண்டுவைத்தார்கள். பச்சைப்பசேலென்று பிஞ்சு பீன்ஸ் கண்ணைப்பறித்தது. நறுக்கிவைத்தவுடன் எடுத்துப்போக நண்பன் மகள் வந்தாள். திடீரென்று அப்பா!....அம்மா!என்று கத்திக்கொண்டே பாத்திரத்துடன் உள்ளே ஓடினாள். என்னவென்று பார்த்தால்  பீன்ஸ் ஒரே சீராக நறுக்கியிருந்தது Emarald பச்சை மரகதப்பரல் போல் இருந்ததாம்!


நண்பர்கள் வீட்டுக்கு பார்க்கப்போகும்போது பழங்களுக்கு பதிலாக காய்கறிகள் வாங்கிக்கொண்டு போவேன். But it received mixed reaction! நான் போனபிறகு அந்தப்பையை பிரித்துப்பார்க்கும் சிலருக்கு காய்கறிகள் ஏமாற்றமாகவே இருந்தது.


வேலையில்லாமல் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பவனை, ‘நீ என்ன செய்கிறாய்!என்று கேட்டால் “I am peeling potatoes!" என்று பதில் சொல்வான். இந்த ஜோக் தமிழ்நாட்டில் அதிகமாக விலை போகவில்லை. நெருங்கிய நண்பர்கள் போனில் என்ன சார் பண்றீங்க?’ என்று கேட்பதற்கு பதிலாக 'I am peeling potatoes!' என்று சொன்னால் ஸார், இன்னிக்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டா சார்!என்ற பதில் கேள்வி! எங்கே போய் முட்டிக்க?


எழுபதுகளில் வேலை விஷயமாக அடிக்கடி ஐரோப்பிய மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த கிழக்கு ஐரோப்பிய தலைநகர்கள் புடாபெஸ்ட், புக்காரெஸ்ட், வார்ஸா, கிழக்கு பெர்லின் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எங்கே போனாலும் ஒருநாள் அந்த நகரத்தின் கறிகாய் மார்க்கெட்டுக்கு ஒரு விஸிட் நிச்சயம். இங்கே அப்போது பரிசயமில்லாத பல காய்கறிகளை அங்கே பார்த்து மகிழ்ந்ததுண்டு! வழக்கமான வெள்ளைநிற காலிப்ளவருடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு, ஊதா கலரிலும் அது அடுக்கிவைத்திருப்பதை பார்ப்பதே ஒரு ஆனந்தம். ஆனால் இப்போது அவையெல்லாமே நம்மூர் சமையலறைக்குள் புகுந்துவிட்டன! 

ஃப்ராங்க்ஃபர்ட்டில் DM 2/-க்கு ஒருடஜன் நல்ல கத்திகள் கிடைக்கும். மொத்தமாக வாங்கிவந்து, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கெல்லாம் --- தில்லானா மோகனாம்பாள் வைத்தி பார்த்தவருக்கெல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுப்பதுபோல் --- ஆளுக்கொரு கத்தி கொடுப்பேன். அதில் ஓரிருவர் மணி! ஆயுதம் யாருக்கும் இலவசமாக கொடுக்கக்கூடாது. இந்தா...இதை வெச்சுக்கோஎன்று பதிலுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அழுத்துவார்கள். National Automatic Rice Cooker இந்தியாவில் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நான் ஒன்று வாங்கிவந்தேன். ஹை! சாதம் வடிக்கவேண்டாமா?..... அதுவாவே Off ஆயிடறதுஎன்று அதிசயமாக அதைப்பார்க்கவந்த நண்பர் மனைவிமாரும் உண்டு!


அதிகவிலை கொடுத்து வெளிநாட்டில் வாங்கிய கத்தி தான் நீடித்து உழைக்கும் என்கிற தியரி முற்றிலும் பொய். Robert Welch, Le Creuset, Lakeland போன்ற கத்திகளையும் வாங்கி உபயோகித்திருக்கிறேன். அதிலொன்று வாங்கின மூன்றாம்நாளே டைனிங் டேபிள் கீழே விழுந்து பிடி வேறு, கத்தி வேறு என்றாகிவிட்டது. இந்த அழகில் ஆயுசுக்கும் சாணை தீட்டவேண்டாம் என்கிற கேரன்ட்டி வேறு. மாறாக Geep Batteries வாங்கும்போது இலவசமாகக்கிடைத்த சிவப்புப்பிடி போட்ட கத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக -- அதை தவறுதலாக காய்கறிக்குப்பையோடு வெளியே போடும்வரை -- உழைத்தது. அரசினர்பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவதாக வரவில்லையா...அதைப்போல!


என் தில்லி நண்பர் (தில்லி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)  H.K. SWAMY கிருஷ்ணஸ்வாமியை  (எங்களுக்கு கிச்சாமி) நீங்களும் திரையில் பார்த்திருக்கலாம். பாரதிபடத்தில் எனக்கு (சின்னசாமி அய்யருக்கு) நண்பராக வருவார். மனுஷன் சமையல்கலையில் ஒரு நளன். அவர் சமையலுக்கு காய்கறி வெட்டிவிட்டு மீதிக்குப்பையை Cutting Plate-ல் ஒரு Modern Art ஆக வடிவமைப்பார். காம்புகளை வைத்து குடுமி, வெண்டைக்காய்க்காம்பு கண்கள், வெள்ளரித்தோலால் புடவை இப்படி! அவரைப்பார்த்து நானும் கற்றுக்கொண்டேன்.  என் கறிகாய்க்குப்பையும் மாடர்ன் ஆர்ட்டாகத்தான் வெளியே போகும்! வெளிநாட்டில் சமையல் உபகரணங்கள் எது வாங்கினாலும், அவருக்கும் ஒன்று சேர்த்து வாங்குவேன்.  மாதமொருமுறை மணி, வர ஞாயித்துக்கிழமை சாப்பிட வரேன். சின்னவெங்காய சாம்பார், அவியல் பண்ணிடுஎன்பார். வரும்போது அவருடன் அவர் தயாரித்த தேங்காய்சாதம், லெமன் ரைஸ், புளியோதரை ஒருவண்டி வடாம் வற்றலும் வரும்! I am missing them all!


மாம்பழக்காலமாதலால், பெங்களூர் வந்தவுடனேயே ஒரு புது பீலர் வாங்கினேன். அது தோலோடு ஒருகொத்து சதையையும் சேர்த்துக்கொண்டுவந்தது. இரண்டுநாளில் இன்னொரு பீலர். அது மேலேயிருந்து கீழே வர மறுத்தது. இன்று மூன்றாவது. இது அதற்கு பிடித்த இடங்களில் மட்டும் திருப்பதி மொட்டைபோல தோலைச்சீவுகிறது. நான் என்ன செய்ய? சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட் விட்ட இந்தியாவில் ஒரு நல்ல பீலர் கிடைக்கவில்லையென்றால் நமது so called பொருளாதார முன்னேற்றம் எங்கே போகிறது?


தமிழ்நாட்டில் மட்டும் மோடி என்றும் பிற மாநிலங்களில் மோதிஎன்றும் அழைக்கப்படும் பிரதமர் அடுத்தமாத ‘Mann Ki Baat’ நிகழ்ச்சியில் என்னை சந்தித்தால், அவரிடம் நான் வைக்கும் ஒரே விண்ணப்பம் இது தான்:
உடனேயே DRDO (Defence Research & Development Organisation), ISRO, IIT, Kharagpur இவற்றிலிருந்து ஐந்து அங்கத்தினர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து, இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு குறைந்தபட்சம் இருவருடங்கள் நன்றாக உழைக்கும் கத்தி/பீலரின் Prototype ஒன்று தயார் செய்யவேண்டும். E-Tender மூலம் குறைந்தவிலைக்கு தயாரிக்க முற்படும் டெண்டர்தாரருக்கு இந்தியாவிலிருக்கும் ஒரு Defence Ordnance Factory-யில் பீலர்/கத்தி தயாரிப்பை ஆறு மாதத்துக்குள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும். அந்த விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதை தூர்தர்ஷன் தில்லி நேரலையில் ஒளிபரப்பும்.


அடுத்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுதும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆளுக்கொரு கத்தி/பீலர் இலவசமாக.....சாரி……. விலையில்லாப் பொருட்களாக ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படவேண்டும். ஒன்றுக்குமேல் வேண்டுமென்றால் எல்லாக்கடைகளிலும் கத்தி/பீலர் ரூ. ஒன்றுக்கு மான்யவிலையில் கிடைக்கும். ஆனால் இதற்கும் ஆதார் கார்டு அவசியம்.  ஜூலை முதல் அமுலுக்குவந்த GST-யிலிருந்து பீலருக்கும் கத்திக்கும் 0% வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

Swach Bharat திட்டத்தைப்போல இந்த திட்டத்தையும் எல்லா மத்திய அமைச்சரவைகளும் விளம்பரம் செய்து முன்னெடுத்துச்செல்லும். வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கவேண்டும்.
‘A GOOD PEELER SHAPES INDIA’………..MODI CUTTING INDIA TO SIZE!....... MAKE GOOD PEELER IN INDIA!........இது தான் நமது அடுத்த தாரகமந்திரம்!
என்ன சார் அநியாயம்?.....நாட்டிலே -– அஜீத் படம் ஊத்திக்கிட்டது, எடப்பாடி-தினகரன் மோதல், நீட் தேர்வு, ஓவியா பிக் பாஸிலிருந்து வெளியேற்றம்,  தலைநகரில் பச்சைக்கோவணத்தோடு விவசாயிகள் போராட்டம் --  போன்ற எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் மக்களை வாட்டும்போது நீங்க கத்தி கபடாவுக்காக இம்மாம் பெரிய கட்டுரை எழுதறீங்களே?....உங்களுக்கே நல்லாப்படுதா?’ என்று கேட்பவர்களுக்கு::


அனுபவிச்சவனுக்குத்தான் அந்த வலி தெரியும்....சார்!